சென்னை மாதவரம் பகுதியில் உள்ள ரசாயன குடோனில் ஏற்பட்ட பயங்கர தீயை அணைக்கும் பணி நடைபெற்றுவரும் நிலையில், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
சென்னை, மாதவரம் ரவுண்டானா அருகே, பெரம்பூரைச் சேர்ந்த ரஞ்சித் என்பவருக்கு சொந்தமான ரசாயன குடோனில் திடீரென தீ விபத்து நேரிட்டது. தகவல் அறிந்து, மாதவரம், செங்குன்றம், மணலி, போன்ற பகுதிகளில் இருந்து 25-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் நிகழ்விடத்திற்கு வந்த, சுமார் 500 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக, இருபதுக்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகளில் தண்ணீர் கொண்டுவரப்படுகின்றன. குடோனில் உள்ள பேரல்கள் வெடித்து சிதறுவதால் அருகிலுள்ள, பிளாஸ்டிக் குடோன், அலுமினிய குடோன் ஆகியவற்றுக்கும் தீ பரவி வருகிறது. காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. உயிர்ச்சேதம் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. தீ விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே தீ விபத்து ஏற்பட்ட இடத்தில், தீயணைப்புத்துறை டிஜிபி சைலேந்திரபாபு, ஆய்வு நடத்தினார். நமது நியூஸ் ஜெ தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், தீ விபத்தால் பொதுமக்களுக்கு எந்தபாதிப்பும் இல்லை எனத் தெரிவித்தார்.