உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து 5ஆவது ஆண்டாக விருதும், பாராட்டும் பெற்றுள்ளது. இது குறித்து தற்போது விரிவாகக் காண்போம்…
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை ஊக்கப்படுத்தும், நாடு தழுவிய அமைப்பான ’தேசிய உடலுறுப்பு மற்றும் திசுமாற்று நிறுவன’த்தின் விருதை, இந்த ஆண்டும் 5ஆவது முறையாகப் பெற்றுள்ளது தமிழகம். வழக்கமாக ‘அதிக உடல் உறுப்புகள் தானம் தந்த மாநிலம்’ என்று விருது பெறும் தமிழகம், இந்த ஆண்டு ‘தானமாகப் பெறப்பட்ட உடல் உறுப்புகளை அதிக அளவில் பயன்படுத்திய மாநிலம்’ என்ற புதிய தகுதியையும் பெற்றுள்ளது.
இந்திய அளவில் மிக அதிக எண்ணிக்கையிலான உடல் உறுப்பு தானக் கொடையாளர்களைக் கொண்டுள்ளது தமிழகம். கடந்த 2008ஆம் ஆண்டு முதல், தற்போது வரையில், ஆயிரத்து 326 கொடையாளர்கள், தங்கள் இறப்பிற்குப் பின்னும், பிறரைக் காக்க, தங்கள் உடல் உறுப்புகளை தானமாக வழங்கி உள்ளனர். இந்தக் கொடையாளர்கள் மூலம், 7 ஆயிரத்து 783 உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளன. அவற்றில், 4 ஆயிரத்து 712 உடல் உறுப்புகள், இதயம், நுரையீரல், சிறுநீரகம் போன்ற அதிமுக்கிய உறுப்புகள் ஆகும்.
இப்படியாகப் பெறப்படும் உறுப்புகள் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே இயங்கும் நிலையில் இருக்கும். அதற்குள்ளாக உரிய நபர்களுக்கு உறுப்புகளைக் கொண்டு சேர்ப்பது மிகவும் சவாலான செயல். இதிலும் தமிழகம் தற்போது மிகப் பெரிய சாதனையை
நிகழ்த்தி உள்ளது.
நடப்பாண்டில், கடந்த அக்டோபர் மாதம் வரையிலான புள்ளிவிவரங்களின்படி, தானமாகப் பெறப்பட்ட சிறுநீரகங்களில் 89% சிறுநீரகங்கள் உரிய நபர்களுக்குப் பொருத்தப்பட்டு உள்ளன. தானமாகப் பெறப்பட்ட கல்லீரல்களில், 89 சதவீத கல்லீரல்களும், தானமாகப் பெறப்பட்ட இதயங்களில் 52 சதவீத இதயங்களும், தானமாகப் பெறப்பட்ட இதய வால்வுகளில் 47 சதவீத வால்வுகளும், தானமாகப் பெறப்பட்ட நுரையீரல்களில் 31 சதவீத நுரையீரல்களும் உரியவர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளன.
மேலும், எதிர்பாராத விதமாக உயிரிழக்கும் நபர்களின் உடல் உறுப்புகள் மூலம், நெடுங்காலமாக உறுப்பு தானத்தை எதிர்நோக்கி உள்ள நோயுற்றவர்களைக் காக்க, பல்வேறு விழிப்புணர்வுப் பணிகளையும் தமிழகம் மேற்கொண்டு வருகின்றது. கடந்த 2016ஆம்
ஆண்டு நவம்பர் மாதம் முதல், நடப்பாண்டின் அக்டோபர் மாதம் வரையிலான காலகட்டத்தில், 652 மூளைச் சாவுகள் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளன. இவர்களில், 431 நபர்களை, அவர்களின் குடும்பத்தினரின் அனுமதி பெற்று உறுப்புதானக் கொடையாளர்களாக
மாற்றி உள்ளது தமிழகம். கடந்த 2008ஆம் ஆண்டு முதல் தற்போது வரையிலான 10 ஆண்டுகால உடல் உறுப்புதானத் தரவுகள், தமிழகத்தில் உள்ளன. இவை, இந்தியாவின் வேறு எந்த மாநிலத்தை விடவும், தமிழகம் உடல் உறுப்பு தானத்தில் சிறந்து விளங்குவதை
வெளிக்காட்டுகின்றன.
இதனால், தமிழகத்தின் முன்னுதாரணத்தைப் பிற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில்தான், தேசிய உடலுறுப்பு மற்றும் திசுமாற்று நிறுவனம், தமிழகத்திற்கு தொடர்ந்து 5ஆவது ஆண்டாக விருதுகளையும், பாராட்டுகளையும் வழங்கி வருகின்றது. இந்த விருதுகளும், பாராட்டுகளும், தமிழக அரசுக்கு மட்டுமல்ல, தானம் கொடுக்கும் மனம் படைத்த தமிழக மக்கள் அனைவருக்கும் உரியவைதான். அந்த வகையில், இந்த விருதுகள் தமிழகத்தின் பெருமிதச் சின்னங்களாக திகழ்கின்றன.
1: மொத்த உடல் உறுப்பு கொடையாளர்கள்: 1,326 பேர்
தானமாகப் பெறப்பட்ட உறுப்புகளின் எண்ணிக்கை: 7,783
தானமாகப் பெறப்பட்ட அதி முக்கிய உறுப்புகளின் எண்ணிக்கை: 4,712
2: பயன்படுத்தப்பட்ட உடல் உறுப்புகள்:
சிறுநீரகங்கள்: 89%
கல்லீரல்கள்: 89%
இதயங்கள்: 52%
இதய வால்வுகள்: 47%
நுரையீரல்கள்: 31% ))