கனமழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரை மணல் மூட்டை வைத்து, தன்னுடைய வீடு பாதிக்காத வகையில், வேறுபாதையில் திருப்பி மக்களை நீரில் மூழ்கடித்த பல்லாவரம் திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்…
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட குரோம்பேட்டை அஸ்தினாபுரம், திருமலை நகர், சரஸ்வதி காலனி, மணிகண்டன் நகர் போன்ற பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனையடுத்து, வருவாய்த் துறை அதிகாரிகள் நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதிக்கு சென்ற பல்லாவரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, நீரை அகற்றும் பணியில் ஈடுபடுவது போல் நடித்து, மக்களை வைத்தே மணல் மூட்டைகளை அடுக்கி தன் வீட்டு பக்கம் தண்ணீர் வராமல் பார்த்துக் கொண்டார். இதனால் மற்ற குடியிருப்பு பகுதிகளுக்கு தண்ணீர் வேகமாக பெருக்கெடுத்து ஓடியது. தகவலறிந்து வந்த வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார், மக்களிடம் விசாரித்த போது, திமுக சட்டமன்ற உறுப்பினர் அறிவுரை பேரில் மணல் மூட்டைகளை அடுக்கியதாக கூறினர். பிறகு உண்மை தன்மையை அறிந்துக் கொண்ட மக்கள், திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும், குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு வருவாய் கோட்டாட்சியரிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.