தமிழகத்தில் தற்போது வரை 47ஆயிரத்து 610 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளது -சத்யபிரதா சாஹு

தமிழகத்தில் தற்போது வரை 47ஆயிரத்து 610 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இதுவரை 113 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் உரிய ஆவணங்களை அளித்ததற்காக 52 கோடி ரூபாய் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். தேர்தல் பணியில் உயிரிழந்த சேலத்தை சேர்ந்த ஆசிரியையின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று சத்யபிரதா சாஹூ தெரிவித்தார். தபால் வாக்குகளை பொருத்தவரை 47ஆயிரத்து 610 வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார். தேர்தல் பணி சான்றிதழ் பெற்ற அரசு அதிகாரி மற்றும் தேர்தலுக்காக பணியாற்றும் தனியார் பணியாளர்களுக்கு வாக்கு சாவடி வேறாக உள்ள பொழுது, தேர்தல் பணி சான்றிதழை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று அவர் கூறினார்.

தற்போது வரை 807 கிலோ தங்கமும் 482 கிலோ வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், அதன் மதிப்பு 228 கோடி ரூபாய் என்று தெரிவித்தார். தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக இது வரை 4ஆயிரத்து 24 வழக்குகள் பதிவாகியுள்ளது என்று கூறினார். மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்று கூறிய அவர், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பிரைலி முறை வாக்குப்பதிவு வசதி செய்து தரப்படும் என்றும் தெரிவித்தார்.

Exit mobile version