தமிழகத்தில் நாளை கத்திரி வெயில் தொடங்கவுள்ள நிலையில், பகல் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தரைகாற்றில் உள்ள ஈரப்பதத்தை எடுத்துக்கொண்டு ஒடிசா நோக்கி நகர்ந்துள்ளது ஃபானி புயல். இதன் காரணமாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. ஈரப்பதமற்ற வறட்சி நிறைந்த காற்று வீசுக்கூடும் எனவும் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், முன் எப்போதும் இல்லாத வகையில், இந்த ஆண்டு கத்திரி வெயில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 110 டிகிரியை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வேலூரில் கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பே 111 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. இந்தநிலையில், வரும் நாட்களில் கடும் வெயில் தாக்க அதிக வாய்ப்பு உள்ளது. இதனால், பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும், நீர் சத்து நிறைந்த பழங்களை உட்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.