தமிழகத்தில் இன்று தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில், சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன.
கொரோனா பரவலைத் தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் இம்மாத ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் இன்று தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமலாகியுள்ளது. இதனையொட்டி, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வாகனங்களை பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. கோவையில் முழு ஊரடங்கையொட்டி, முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன. காவல்துறையினர், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில், காய்கறி, மளிகை கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. காவல்துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் தளர்வுகளில்லா முழு ஊரடங்கையொட்டி, மருந்து கடை மற்றும் பால் விற்பனை நிலையம் ஆகியவை மட்டுமே திறக்கப்பட்டன. முக்கிய சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. முக்கிய இடங்களில் தடுப்புகளை ஏற்படுத்தி, காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் காய்கறி, இறைச்சிக் கடை உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. இரு சக்கர வாகனங்களில் வருவோரை, தீவிர விசாரணைக்குப் பின்னரே காவல் துறையினர் அனுப்பி வைக்கின்றனர்.