தமிழகத்தில் 10 இடங்களில் சதமடித்தது வெயில்

தமிழகத்தின் 10 இடங்களில் வெயில் 100 டிகிரி செல்சியசை தாண்டியுள்ளது. இப்பகுதிகளில் அனல் காற்று வீசியதால் மக்கள் கடுமையான அவதிக்குள்ளாகினர்.

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் நிறைவுபெற்ற போதும், வெயில் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. காலை முதலே வெப்பத்தின் தாக்கம் இருப்பதால் மக்கள் வெளியில் செல்ல முடியாமல் கடுமையான அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 2 தினங்களாக அனல்காற்றுடன் கூடிய வெயில் வறுத்து எடுக்கிறது. இதனிடையே, தமிழகத்தின் 10 இடங்களில் நேற்று வெயில் 100 டிகிரி செல்சியசை தாண்டி பதிவாகி உள்ளது.

அதிகபட்சமாக திருத்தணியில் 107.06 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 106.7 டிகிரி செல்சியசும் சென்னை நுங்கம்பாக்கத்தில் 105.62 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவானது.

கடலூர், மதுரை தெற்கு, மதுரை விமான நிலையம், நாகை, பரங்கிப்பேட்டை, திருச்சி, வேலூர் போன்ற இடங்களிலும் வெயில் சதத்தை தாண்டியது.

இந்நிலையில் கோவை விமானநிலையம், தர்மபுரி, கன்னியாகுமரி, கரூர், நாமக்கல், பாளையங்கோட்டை, சேலம் மற்றும் தூத்துக்குடி ஆகிய பகுதிகளிலும் வெயில் சதத்தை நெருங்கியதால் வாகனஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையான அவதிக்குள்ளாகினர்.

Exit mobile version