வடகிழக்கு பருவமழை தமிழக கடலோர பகுதிகளில் துவங்கிவிட்டதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் இதர பகுதிகள், ராயலசீமா, தெற்கு கர்நாடக பகுதிகளிலும் வடகிழக்கு பருவ மழை துவங்கும் என்றார். தற்போது காற்றழுத்த தாழ்வுநிலை இலங்கை முதல் தென்மேற்கு வங்க கடல் வரை நிலவுவதாக கூறிய பாலச்சந்திரன், தென் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக தெரிவித்தார்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை புழலில் 11 செண்டி மீட்டரும் கேளம்பாக்கத்தில் 10 செண்டி மீட்டரும் மழை பதிவாகியிருப்பதாக கூறினார். அடுத்த இருநாட்களுக்கு தமிழகத்தில் பெருவாரியான இடங்களில் மழை பெய்யும் என்றும் சென்னையை பொருத்தவரை இடைவெளிவிட்டு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றார்.