தமிழகத்தில் உதயமாகும் 5 புதிய மாவட்டங்கள் அதனால் கிடைக்கப்போகும் பலன்கள் பற்றிய தொகுப்பு

தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் தொடர்ச்சியாக புதிய மாவட்டங்கள் உதயமாகின்றன. அதனால் கிடைக்கப்போகும் பலன்கள் என்ன என்பதை பற்றிய பார்க்கலாம்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முதலமைச்சராக பதவியேற்ற பின் கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை என ஐந்து புதிய மாவட்டங்கள் உதயமாகியுள்ளன. நிர்வாக வசதி மற்றும் மக்கள் நலனுக்கான மாவட்டங்கள் பிரிக்கப்பட்டாலும், அதற்கென அதிகமான நெறிமுறைகள் மற்றும் தகுதிகள் ஏராளமாக உள்ளன. புதிய மாவட்டம் பிரிப்பதற்கான நெறிமுறைகளை வருவாய் நிர்வாகம் வகுத்துள்ளது.

அதன்படி,புதிய மாவட்டத்தின் பரப்பளவு 2,500 சதுர கிலோமீட்டர் முதல் 9,000 துர கிலோ மீட்டராக இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அதேபோல், 10 லட்சம் முதல் 30 லட்சம் வரை மக்கள் தொகை இருக்க வேண்டும் என்றும்,
குறைந்தபட்சமாக 200 கிராமங்களை உள்ளடக்கி இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2 அல்லது 3 ஊராட்சி ஒன்றியங்களை முழுவதுமாக உட்படுத்தியிருக்க வேண்டும் என்றும், 5 வட்டங்கள், 2 கோட்டங்கள் அடங்கியிருக்க வேண்டும் என்றும் நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.

புதிய மாவட்டத்திற்கான தகுதிகள்:

* 2,500 ச.கி.மீட்டர் முதல் 9,000 ச.கி.மீட்டராக பரப்பளவு இருக்க வேண்டும்

* 10 லட்சம் முதல் 30 லட்சம் வரை மக்கள் தொகை இருக்க வேண்டும்

* குறைந்தபட்சமாக 200 கிராமங்களை உள்ளடக்க வேண்டும்

* 2 அல்லது 3 ஊராட்சி ஒன்றியங்களை முழுவதுமாக உட்படுத்தியிருக்க வேண்டும்

* 5 வட்டங்கள், 2 கோட்டங்கள் அடங்கியிருக்க வேண்டும்))

வருவாய் நிர்வாகத்தின் சட்ட திட்டங்கள்படி பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு காணப்படுகிறது. தங்களின் தேவையை எளிதில் பூர்த்தி செய்யும் வகையில் தங்கள் பகுதியிலேயே புதியதாய் ஆட்சியர் அலுவலகம், மருத்துவமனைகள், பள்ளிகள் என அடிப்படை வசதிகள் கிடைக்கப் பெறும் என பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதனால் புதிய மாவட்டம் தோன்றுவது என்பது மாவட்ட மக்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியையே தருவதாக உள்ளது.

நிர்வாக வசதி ஒரு புறம் இருக்க மக்களின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்தே
மாவட்டங்கள் பிரிக்கப்படுவதாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன்
தெரிவித்துள்ளார்.

கோவையிலிருந்து பொள்ளாச்சி, நாகையிலிருந்து மயிலாடுதுறை, தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் என பட்டியல் நீண்டுகொண்டே சென்றாலும் குறிப்பிட்ட பரப்பளவு, மக்கள்தொகை இருக்கும் படத்தில் அந்த மாவட்ட மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

 

Exit mobile version