கன்னிமாரா நூலகத்திற்கு அடுத்தபடியாக, ஸ்ரீவில்லிபுத்தூரில் 144 ஆண்டுகள் பழமையான நூலகம் ஒன்று சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
ஆங்கிலேயர்கள் என்னதான் நம்மை அடக்குமுறையை பயன்படுத்தி ஆட்சி செய்திருந்தாலும், அவர்கள் கொண்டு வந்த பல திட்டங்கள் தற்போதும் நம் மக்களுக்கு பயனளித்து வருகின்றன.
அந்த வகையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பென்னிங்டன் என்ற ஆங்கிலக்
கலெக்டரின் முயற்சியால் நிறுவப்பட்ட நூலகம் ஒன்று இன்றைய இளைஞர்களுக்கு மட்டுமின்றி எதிர்கால தலைமுறையினருக்கும் உதவும் விதத்தில் அறிவுப்பசியைத் தீர்க்கும் ஆலயமாக விளங்குகிறது.
ஆங்கிலேயர் ஆட்சியில், திருநெல்வேலி மாவட்டத்தின் கீழ் ஸ்ரீவில்லிபுத்தூர் இருந்தபோது அப்போதைய கலெக்டரான பென்னிங்டன் வழிகாட்டுதலோடு 1875 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நூலாகம் 144 ஆண்டுகளை கடந்து இன்றும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
1334 சதுர அடி பரப்பளவில் இருக்கும் இந்த நூலகத்தில் சிறுவர்,சிறுமியர்,ஆண்கள், பெண்கள் அரசு பணிக்கு தயாராகும் இளைஞர்கள், மாணவிகள் என அனைவருக்கும் தேவைப்படும் புத்தகங்கள் உள்ளன.
இந்த நூலகத்தில், 15 நாளிதழ்கள் 100 வார மற்றும் மாத இதழ்கள் 75 ஆங்கிலம் 46 அறிவியல் புத்தகங்கள், அரசு தேர்விற்க்கான புத்தகங்கள், இலக்கியங்கள்,1950 முதல் தற்போது வரை வெளிவந்த நான்காயிரத்திற்கும் மேற்பட்ட அரசு கெசட்டுகள், ஆகியவற்றுடன் முப்பத்தி ஒன்பதாயிரத்து 900 தமிழ் புத்தகங்கள், முப்பத்தி இரண்டாயிரத்து 600 ஆங்கில புத்தகங்கள் உட்பட 1 லட்சத்திற்க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.
நூலகமானது முற்றிலும் கணினி மையமாக்கபட்டுள்ளதால், வாசகர்கள் எந்த புத்தகத்தையும் எளிதில் கண்டறிந்து படிக்கலாம்.
கலெக்டரை கவுரவ தலைவராகக் கொண்டு இயங்கிவரும் இந்த நூலகத்தில் நூல்கள் பராமரிப்பில் முழு அளவில் பெண்களே பணியாற்றி வருகின்றனர். வாசகர்களுக்கு தேவைப்படும் நூல்கள் நகல் எடுத்தும் கொடுக்கப்படுகிறது. இங்குள்ள பழமைவாய்ந்த நூல்களை பாதுகாக்கும் பொருட்டு, அவற்றை ஸ்கேன் செய்து டிவிடி கேசட்டில் பதிவு செய்து வைத்துள்ளனர்.
மேலும், இந்த நூலகத்தில் உள்ள போட்டித்தேர்வு புத்தகங்களை படித்து சுமார் 200 க்கும் மேற்பட்டவர்கள் இன்று அரசுப்பணி பெற்றுள்ளனர். கடந்த1950 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சுமார் 69 ஆண்டுகளாக தமிழக அரசின் ஆணை பிறப்பிப்பு, நிறுத்தி வைப்பது, வழக்குகள் சம்பந்தமான கெஜட்டுகள் அனைத்தும் இங்கு மட்டுமே கிடைக்கும் என்பது இந்த நூலகத்தின் தனி சிறப்பாகும்.