சாலைமறியலில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைது

2வது நாளாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்தம் மேற்கொண்டு வரும்நிலையில்,பல்வேறு இடங்களில் சாலைமறியலில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபடுபட்டு வருகின்றனர். 2வது நாளாக தொடரும் போராட்டத்தில், கோவை வட்டாச்சியர் அலுவலகம் முன்பு, ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இவர்களுடன் சமாதான பேச்சு வார்தை நடத்தி தோல்வி அடைந்ததால் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை கல்குளம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயற்சி மேற்கொண்டனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், அனைவரையும் கைது செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் ஜாக்டோ ஜியோ சார்பாக 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Exit mobile version