முதுமைக் காலத்தில் பெற்றோரைக் கைவிடும் பிள்ளைகளுக்கு, 6 மாதம் சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பிள்ளைகள் தங்களது பெற்றோர்களை, வயதான காலத்தில் கைவிடுவது அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க, சமூக நலம் மற்றும் அதிகாரம் வழங்கல் துறை அமைச்சகத்துக்கு பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தியது. இதனைத் தொடர்ந்து தற்போது உள்ள குடிமக்கள் பராமரிப்பு நலச்சட்டம் 2007ல் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்து புதிய சட்ட வரைவு அறிக்கையைத் தயாரித்து வருகிறது. அதன்படி வயதான பெற்றோர்களைக் கவனிக்காமல் தவிக்க விடும் பிள்ளைகளுக்கு 3 மாதம் சிறைத் தண்டனை என்றிருப்பதை, 6 மாதக் காலமாக அதிகரிக்கவும், பெற்றோருக்குப் பராமரிப்புத் தொகையாக 10 ஆயிரம் ரூபாய் வரை வழங்கலாம் என மாற்றம் கொண்டுவரவும் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.