கொடைக்கானல் மலைப் பகுதியில் கொண்டை ஊசி வளைவுகளில் குவி கண்ணாடி அமைக்கப்படுவதற்கு வாகன ஓட்டிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்
சர்வதேச சுற்றுலாத் தலமாக விளங்கும் கொடைக்கானலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாபயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இதன் காரணமாக நாளுக்கு நாள் வாகனங்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சாலைகளின் வளைவுகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகின்றன. ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் துவங்க இருப்பதால் வாகன விபத்துகளை தடுக்கும் விதமாக, மாவட்ட ஆட்சியர் வினய் உத்தரவின் பேரில் கொடைக்கானல் மலை பகுதிகளில் உள்ள கொண்டை ஊசி வளைவுகள், குறுகிய வளைவுகள் என 112 இடங்களில் தற்போது குவி கண்ணாடி அமைக்கவும் பணி நடைபெற்று வருகிறது. பழனி மற்றும் வத்தலகுண்டு பிரதான சாலைகளிலும் இந்தப் பணி நடைபெற்று வருகிறது. குவி கண்ணாடி அமைக்க நடவடிக்கை எடுத்து வரும் தமிழக அரசுக்கு வாகன உரிமையாளர்கள் சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.