மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைக்கத் தாமதமானால் குடியரசுத் தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்த வேண்டும் என அமைச்சர் சுதிர் முங்கந்திவார் தெரிவித்துள்ளதற்கு சிவசேனா கண்டனம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக – சிவசேனா கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ளபோதும், முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு முதலமைச்சர் பதவியைத் தங்களுக்கு வழங்க வேண்டும் என சிவசேனா கோருவதால் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடிக்கிறது. இந்நிலையில் வரும் ஏழாம் தேதிக்குள் புதிய அரசு அமைக்கப்படாவிட்டால் குடியரசுத் தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்த வேண்டும் என மாநில அமைச்சரும் பாஜக தலைவருமான சுதிர் முங்கந்திவார் தெரிவித்துள்ளளார். இதற்கு சிவசேனா நாளேடான சாம்னாவில் எழுதியுள்ள கட்டுரையில் எதிர்வினை வந்துள்ளது. அதில், குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கூறியிருப்பது ஜனநாயகத்துக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகும் என்றும், இது முகலாயர் காலத்தில் மராத்தியர்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை நினைவூட்டுவதாக உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.