உச்சகட்ட அரசியில் குழப்பத்தில் இருந்த மஹாராஷ்டிராவில் அதிரடி திருப்பமாக தேவந்திர பட்னாவிஸ் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார்.
நடைபெற்று முடிந்து மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் முதலமைச்சராக யார் பதவியேற்பது குறித்து தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. சிவசேனா – பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தநிலையில் இரண்டரை ஆண்டுகள் ஆட்சியில் உரிமை கேட்டு சிவசேனா கோரிக்கை விடுத்திருந்தது. இதனை பாஜக மறுத்ததால் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரசுடன் சிவசேனா பேச்சு வார்த்தை நடத்தியது.
இதற்கிடையில் பாஜகவில் இருந்து முற்றிலும் பிரிந்தால் தான் தங்களது கட்சியின் ஆதரவு கிடைக்குமென தேசியவாத காங்கிரஸ் கட்சி கூறியிருந்தது. இதனையடுத்து பாஜகவிலிருந்து பிரிந்த சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியது. 3 கட்சிகளின் கூட்டணி குறித்து இன்று முக்கிய முடிவு வெளியாகும் என்று இருந்தநிலையில் அதிரடி திருப்பமாக பாஜகவுடன் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்ததுடன், பாஜகவை சேர்ந்த தேவந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
இதன் மூலம், 10 நாட்களாக நீடித்து வந்த குடியரசு தலைவரின் ஆட்சி காலம் முடிவுக்கு வந்தது.
பெரும்பான்மைக்கு 145 எம்.எல்.ஏ.க்கள் தேவைப்படும் சூழலில், பாஜக 105 எம்.எல்.ஏ.க்கள், தேசியவாத காங்கிரஸ் 54 எம்.எல்.ஏ.க்கள் சேர்ந்து கூட்டணி அமைத்தனர்.