வலங்கைமான் அருகே இளைஞர் ஒருவர் தண்ணீர் மற்றும் ஆள் பற்றாக்குறையின் காரணமாக தனக்கு சொந்தமான இடத்தில் பட்டு புழுக்களை வளர்த்து, பட்டு உற்பத்தி செய்வதன் மூலம் அதிக லாபம் பெற்று வருகிறார்…
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள நரசிங்க மங்கலம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய் அமிர்தராஜ். திருவாரூர் மாவட்டத்தில் தற்போது விவசாயத் தொழிலில் ஆள் பற்றாக்குறை மற்றும் தண்ணீர்பற்றாக்குறை நிலவி வருவதால், விஜய் அமிர்தராஜ் விவசாயத்திற்கு மாற்றாக பட்டு புழுக்களை வளர்த்து பட்டு உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இதற்காக இவர், கம்பளிப்புழுவின் இனமான குடம்பி என்ற இளம் பட்டுப்புழுக்களை உடுமலை பேட்டையிருந்து வாங்கிவந்து வளர்த்து வருகிறார்.
மேலும் இவர், தனக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் பட்டுப்புழுக்கள் விரும்பி உண்கிற மல்பெரி செடிகளையும் நடவு செய்துள்ளார்.
இவர் பட்டு உற்பத்தி செய்யும் இடத்தில், தினந்தோரும் காலை அல்லது மாலை நேரங்களில் மல்பெரி தழைகளை பறித்து, சுத்தமான ஈரத்துணியைக் கொண்டு மூடி பாதுகாத்து வைத்து புழுக்களுக்கு உணவாக இடப்படுகிறது.
அந்த மல்பெரி இலைகளை ஒருவாரத்திற்குள் தின்று தீர்த்துவிடும் பட்டு புழுக்கள், தன்னை சுற்றி முன்னும் பின்னுமாக தனது எச்சிலை கொண்டு பட்டு இழைகளைக் கூடாக பின்னி கூட்டுபுழுவாக உருவாகிறது.
பின்னர் அந்த பட்டு புழு கூடுகள் சேகரிக்கப்பட்டு புதுகோட்டை, தருமபுரி, ஓசூர் மற்றும் சேலம் போன்ற இடங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் தரத்திற்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது.
இது குறித்து பேசிய விஜய் அமிர்தராஜ் தமிழ்நாடு அரசு, பட்டு வளர்ச்சித் துறையின் வழிக்காட்டுதல்களுடன் இந்த தொழிலை, தான் செய்து வருவதாகவும், இதன் மூலம் குறைவான முதலீட்டில் அதிகல் லாபம் பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
விஜய் அமிர்தராஜ்-ன் பட்டு உற்பத்தி செய்யும் இடத்திற்கு வருகை தரும் வேளாண் மாணவர்கள், இந்த தயாரிப்பு
தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக தெரிவிக்கின்றனர்