குறைந்த நாட்களில் அதிக லாபம் தரும் இயற்கை பப்பாளிகள்

தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் இயற்கை முறையில் பயிரிடப்பட்டுள்ள பப்பாளி அமோக விளைச்சல் கண்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதனையொட்டியுள்ள சல்லிப்பட்டி, காமக்காபட்டி, வீர சக்கம்மாள்புரம், லட்சுமிபுரம் ஆகிய பகுதிகளில் கரும்பு, வாழை, வெண்டை, கத்திரிக்காய், தக்காளி போன்றவை அதிகளவில் பயிரிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இப்பகுதிகளில் குறைந்த நாட்களில் அதிக மகசூல் கிடைக்கும் பழவகையான பப்பாளியும் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளன.

இயற்கை உரங்களை கொண்டு நிலத்தை பண்படுத்தி, குறிப்பிட்ட இடைவெளியில் பயிரிடப்படும் பப்பாளி நாற்றுகள், ஐந்து மாதங்களில் பூக்க ஆரம்பித்து, அடுத்த இரண்டு மாதங்களில் தரமான பப்பாளிகளை அளிப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இந்த பப்பாளிகளை, தேனி, ஆண்டிப்பட்டி, வத்தலகுண்டு வியாபாரிகள் மற்றும் கேரள வியாபாரிகள் கிலோ 10 ரூபாய் வீதம் விலை கொடுத்து வாங்கி செல்வதாகவும் கூறுகின்றனர்.

4 கிலோ வரை எடையுடன் இருக்கும் இந்த பப்பாளிகள், மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளதாக கூறும் விவசாயிகள், குறைவான நாட்களில் அதிக லாபம் கிடைக்கும் பழமாக இந்த பப்பாளிகள் இருப்பதால், இப்பகுதி விவசாயிகள் மிகந்த ஆர்வத்துடன் இதை பயிர் செய்வதாக கூறுகின்றனர்.

Exit mobile version