வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள மாருதி நகரை சேர்ந்தவர் கட்டிட ஒப்பந்ததாரர் பாலு. இவருக்கு ஒரு மகனும், பத்மபிரியா, ஹரிப்பிரியா என இரண்டு மகள்களும் இருந்தனர். பத்மபிரியாவும், ஹரிப்பிரியாவும் இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்த சகோதரிகள். இவர்கள் இருவரும் காட்பாடியில் உள்ள தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 12-ஆம் வகுப்புப் படித்து வந்தனர்.
இந்நிலையில் சகோதரிகள் இருவரும் இணைய வழியில் பள்ளிக்கூட ஆசிரியர் தங்களுக்குப் பாடம் நடத்த உள்ளதாகவும், அதைக் கவனிக்கப்போகிறோம் என்று சொல்லி, வீட்டின் அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டனர்.அதன்பிறகு நீண்ட நேரமாகியும், சகோதரிகள் சென்ற அறைக்கதவுத் திறக்கப்படவில்லை. இதையடுத்து, பெற்றோர்கள் அறைக் கதவை தட்டி சகோதரிகளை வெளியில் அழைத்தபோது, அறைக் கதவும் திறக்கப்படவில்லை, அறையில் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. இதையடுத்துப் பயந்துபோன பெற்றோர்கள், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து அறைக்குள் சென்றபோது, இரண்டு சகோதரிகளும் தனித் தனியாக புடவையில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாகத் தொங்கினர். இதைப் பார்த்து அந்தச் சகோதரிகளின் பெற்றோர் கதறி அழுதனர். அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், காட்பாடி காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சகோதரிகளின் சடலங்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பத்மபிரியாவும், ஹரிப்பிரியாவும் காலையில் இருந்து பெற்றோருடன் மிக இயல்பாகவே பேசிக் கொண்டிருந்ததும், வீட்டில் வேறு எந்தப் பிரச்னையும் இல்லை என்பதும் உறுதியாகி உள்ளது. அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் இதுபற்றித் தெரிவிக்கும்போது, இணையவழியில் படிக்கப்போன சகோதரிகள் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டதில் மர்மம் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்டனரா? என காட்பாடி காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.