கர்நாடகாவில் ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழும்- எடியூரப்பா

கர்நாடகாவில் காங்கிரஸ், மத சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழும் என அம்மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

2018ஆம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற்ற கர்நாடகா சட்டப் பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிபெரும்பான்மை கிடைக்காத சூழலில் வெறும் 37 எம்.எல்.ஏக்களை பெற்ற மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு 78 எம்.எல்.ஏக்களை கொண்ட காங்கிரஸ் ஆதரவு அளித்தது. இதனால் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் எச்.டி.தேவகவுடாவின் மகன் குமாரசாமி கர்நாடகா முதலமைச்சராக பதவியேற்றார். இருப்பினும் அமைச்சரவை விரிவாக்கம், வாரிய தலைவர் பதவிகள் உள்ளிட்டவற்றை பிரிப்பதில் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் இடையே விரிசல் உருவானது. இதனால் மக்களவை தேர்தலுக்கு முன்பாக கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில் ஹூப்ளியில் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த எடியூரப்பா, 20க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தற்போதைய மாநில அரசின் மீது அதிருப்தியில் இருப்பதாகவும், அவர்கள் எந்த நேரத்திலும் எந்த முடிவும் எடுக்கலாம் எனவும் கூறினார். இதனால் கர்நாடகா அரசியலில் மீண்டும் பரபரப்பு அதிகரித்துள்ளது.

Exit mobile version