கர்நாடக மாநிலத்தின் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை ஒத்திவைத்துள்ளதாகத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில், முந்தைய குமாரசாமி தலைமையிலான அரசுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த 17 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். இதனால் 15 எம்.எல்.ஏக்களையும் அன்றைய சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்தத் தகுதி நீக்க உத்தரவை எதிர்த்து 15 எம்.எல்.ஏக்களும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்நிலையில் 15 தொகுதிகளையும் காலியானதாக அறிவித்த தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியையும் அறிவித்தது. இதற்கிடையே தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை எதிர்த்தும், தாங்கள் இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கோரியும் 15 எம்.எல்.ஏக்களும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர் . எம்.எல்.ஏக்களின் மனுவுக்குப் பதில்மனு தாக்கல் செய்த தேர்தல் ஆணையம், தகுதிநீக்கம் தொடர்பான வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை தேர்தலை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது.