ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் பிரிவினைவாதிகள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், ஸ்ரீநகர், புல்வாமா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை ராணுவத்தினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய போராட்டக்காரர்களை விரட்டியடிக்க துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் பொதுமக்களில் 7 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் புல்வாமாவில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்த பிரிவினைவாத அமைப்புகள் அழைப்பு விடுத்தன. இன்று ஸ்ரீநகரின் பதாமி பாக் என்ற இடத்தில் உள்ள ராணுவ தலைமையத்தை நோக்கி பொதுமக்கள் பேரணி நடத்தவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.
இதையொட்டி அசம்பாவிதங்களை தவிர்க்கும்வகையில் புல்வாமா, ஸ்ரீநகர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்தப் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புப் படைவீரர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.