ஜம்மு காஷ்மீரில் காவல்துறை அதிகாரி ஒருவர் நீண்ட நாட்களாக பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்து வந்தது தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யார் அந்த காவல்துறை அதிகாரி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்…
கடந்த 2001ம் ஆண்டு இந்தியப் பாராளுமன்றத்தின் மீது பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 9 காவல்துறை அதிகாரிகளும் 6 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அப்சல் குரு என்ற நபரைக் காவல்துறையினர் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் பாராளுமன்ற தாக்குதலுக்கு தேவேந்தர் சிங் என்ற காவல்துறை அதிகாரி உதவி செய்ததாக அப்சல்குரு தெரிவித்தார். எனினும், விசாரணையில் தேவிந்தா் சிங்குக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லாததால் காவல்துறையினர் அவர் மீதான குற்றச்சாட்டை நிராகரித்தனர்.
பாராளுமன்ற வளாகத்தில் தாக்குதல் நடத்திய குற்றத்திற்காக கடந்த 2013ம் ஆண்டு அப்சல் குரு தூக்கிலிடப்பட்டார். சமீபத்தில் தேவேந்திர சிங் தனது காரில் லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பின் முக்கிய தளபதி நவீது பாபு, ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் அல்தாஃப் ஆகியோரை அழைத்து சென்ற போது கையும் களவுமாக பிடிபட்டார். இதில் நவீது பாபு 9க்கும் மேற்பட்டோரை கொலை செய்த குற்றத்திற்காக காவல்துறையினரால் தேடப்பட்டு வருபவர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் தேவேந்திர சிங்கிற்கு ஜம்மு காஷ்மீரில் வன்முறையில் ஈடுபட்டு வரும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதும் டெல்லியில் குடியரசு தின நிகழ்ச்சிகளை சீர்குலைப்பதற்காக அவர்களை அழைத்து செல்வதும் தெரிய வந்தது. இதற்காக தேவேந்திர சிங் 12 லட்ச ரூபாய் லஞ்சமாக பெற்றுள்ளார்.,
ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தடுப்பு படையின் துணை காவல் ஆய்வாளராக பணியை தொடங்கிய தேவேந்தர் சிங் வெகு விரைவிலேயே துணைக் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார். தேவேந்தர் சிங் சிறப்பான செயல்பாட்டின் காரணமாக இந்தியப் புலனாய்வு துறை, ரா, பாதுகாப்பு படை உளவுத்துறைகளின் ஆலோசனைக் குழுவில் முக்கிய பங்கு வகித்தார். துணைக் காவல் கண்காணிப்பாளர் பணியில் இருந்து விரைவில் அவருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட இருந்ததாகவும் இந்நிலையில் தற்போது அவருக்கு வழங்கப்பட்ட விருதுகள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்த காவல்துறை அதிகாரியே பயங்கரவாதிகளுக்கு நீண்ட காலமாக உதவி வந்தது காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.