இந்தியாவில், வாழ்க்கை நடத்த உகந்த நகரங்களின் பட்டியலில், சென்னை நான்காமிடத்தையும், கோவை ஏழாமிடத்தையும் பெற்றுள்ளன.
கல்வி, நலவாழ்வு, வீட்டு வசதி, உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில், வாழ்க்கை நடத்த உகந்த நகரங்களின் தர வரிசையை, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் வெளியிட்டுள்ளது. பத்து லட்சத்துக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட நகரங்கள் பட்டியலில், பெங்களூரு, புனே, அகமதாபாத் ஆகியன, முதல் மூன்று இடங்களில் உள்ளன. சென்னை நான்காமிடத்திலும், கோவை ஏழாமிடத்திலும் உள்ளன. பத்து லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்களில், சிம்லா முதலிடத்திலும், புவனேஸ்வர் இரண்டாமிடத்திலும் உள்ளன. சேலம், வேலூர், திருச்சி ஆகியன, முறையே 5, 6 மற்றும் பத்தாமிடங்களில் உள்ளன. பத்து லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட சிறப்பான செயல்பாடுள்ள மாநகராட்சிகளில், சேலம், திருப்பூர், திருநெல்வேலி ஆகிய நகரங்கள் 5, 6 மற்றும் பத்தாமிடங்களை பெற்றுள்ளன.