இந்தியாவில் பெட்ரோ கெமிக்கல்ஸ், உள்கட்டமைப்பு மற்றும் நிலக்கரித்துறை உள்ளிட்ட துறைகளில் 7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் முதலீடு செய்ய சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது.
சவுதி அரேபிய முதலீட்டிற்கான சிறந்த இடமாக இந்தியா உள்ளதாக இந்தியாவிற்கான சவுதி தூதர் டாக்டர் சவுத் பின் முகமது அல்சடி தெரிவித்துள்ளார். எண்ணெய், எரிவாயு மற்றும் சுரங்கத்துறைகளில் நீண்ட கால ஒத்துழைப்பு குறித்து ஆலோசித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். எரிசக்தி, எண்ணெய் சுத்திகரிப்பு, பெட்ரோ கெமிக்கல், உள்கட்டமைப்பு, விவசாயம், தாதுக்கள் மற்றும் நிலக்கரி துறைகளில் இந்தியாவில் முதலீடு செய்வது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் முகமது அல்சடி தெரிவித்தார்.
இந்தியா மற்றும் சவுதி இடையிலான வணிகத்தை குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றுவது என்பதும் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் ‘விஷன் 2030’ கொள்கையில் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 17 சதவீதத்தையும், 32 சதவீத இயற்கை எரிவாயு தேவையையும் சவுதி பூர்த்தி செய்வது குறிப்பிடத்தக்கது.