செந்துறை அருகே அரசு பள்ளியில் ஆசிரியர்களின் வழிகாட்டுதலோடு, மாணவர்கள் இயற்கை தோட்டம் அமைத்து அசத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்த சோழன் குடிக்காடு கிராமத்தில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப்பள்ளியானது கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. சுமார் 25க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த குழந்தைகள் இப்பள்ளியில் கல்வி பயின்று வருகிறார்கள். 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வரும் இப்பள்ளி, கடந்த 11 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகிறது. இங்கு பயிலும் மாணவர்கள் தங்கள் ஆசிரியரின் வழிகாட்டுதலோடு, பள்ளி வளாகத்திலேயே காய்கறி மற்றும் மூலிகை தோட்டம் அமைத்து, விளையாட்டு நேரத்தில் சிறிது நேரம் ஒதுக்கி அதனை பராமரித்து வருகின்றனர்.
இத்தோட்டத்தில் வெண்டை காய்,அவரை, கொத்தவரை,பீன்ஸ், கத்திரிக்காய்,முருங்கை பாவக்காய், மற்றும் வாழை உள்ளிட்ட காய்கறிகளும் பயிரிடப்படுகிறது. இங்கு விளையும் காய்கறிகள், அந்த பள்ளியின், சத்துணவு சத்துணவு மையத்திலேயே சமைக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
தாங்கள் விளைவித்த காய்கறிகளை, தாங்களே சாப்பிட்டு மகிழ்வது மிகுந்த மனநிறைவை தருவதாக மாணவர்கள் கூறுகின்றனர்.
இது மட்டுமில்லாமல், துளசி, தூதுவளை, கரிசலாங்கண்ணி, குப்பைமேனி உள்ளிட்ட மூலிகைகளையும், கீரைவகைகளையும் மாணவர்கள் வளர்த்து வருகின்றனர். இன்றைய தலைமுறையினருக்கு இப்பள்ளி விவசாயம் சார்ந்த செயல்பாடுகளை கற்றுத்தருவதோடு, தமிழக அரசிடமிருந்து பல விருதுகளையும் பெற்றுள்ளது.
இதுகுறித்து பேசிய மாணவர்கள், தங்கள் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி தரவேண்டுமென தமிழக முதல்வருக்கும், கல்விதுறைக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர். மாணவர்களுக்கு வெறும் பள்ளிப் பாடத்தை கற்றுத்தருவதோடு மட்டுமல்லாமல், விவசாயம் மற்றும் வாழ்வியல் சார்ந்தவற்றையும் கற்றுத்தரும் இந்த பள்ளி, மற்ற அரசுப்பள்ளிகளுக்கெல்லாம் முன்னுதாரணமாக இருப்பதால், பல்வேறு தரப்பினரிடமும் பாராட்டுதல்களையும் பெற்றுள்ளது.