ஜெர்மனியில் சொந்த தொழிலில் சாதித்து வரும் “கிராமத்து பெண்”

திருவாடானை அருகே உள்ள கிராமத்தில் பிறந்து வளர்ந்த ஒரு பெண்  ஜெர்மனியில் சொந்தத் தொழிலில் சாதித்துவருகிறார். 

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள அஞ்சுகோட்டை என்ற அழகான கிராமத்தில் பிறந்தவர்தான் மகேஸ்வரி. சிறு வயது முதலே களிமண் கொண்டு சிறு சிறு பொருட்கள் செய்து விற்பனை செய்து வந்துள்ளார் மகேஸ்வரி. கடந்த அக்டோபரில், மகேஸ்வரிக்கு திருமணம் நடந்தது. மகேஸ்வரியின் கணவர், பிராங்ஃபர்ட் நகரில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஆட்டோமொபைல் துறையில் பொறியாளராகப் பணிபுரிகிறார்.

சிறு வயது ஆசையை திருமணத்தினால் துறப்பதா என நினைத்த மகேஸ்வரி, தனது ஆசையை கணவரிடம் கூற, அவரும் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்க, தனது சுய தொழில் பயணத்தை தொடங்கினார் மகேஸ்வரி.பிராங்பேர்ட் பகுதியில் வசிக்கும் மகேஸ்வரி, சுய தொழில் செய்யும் முயற்சியில், ஜெர்மணியில் கிடைக்ககூடிய களிமண் மற்றும் குவல்லிங் பேப்பர், பட்டு நூல் என பலவிதமான பொருட்களைக் கொண்டு, வீட்டில் இருந்தப்படியே, செயின், காதணிகள், வளையல்கள் என ஃபேன்சி நகைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.

ரெசின் ஜுவல்லரி தயாரிப்பிலும் இவர் மிகவும் பிரபலம். முதுகலையில் பொறியியல் பட்டம் பெற்றிருந்தாலும், மனதுக்குப் பிடித்தமான வேலையைத்தான் செய்ய வேண்டும் என்ற முனைப்பில், இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல், துணிகளிலும், தன் கற்பனை வளத்தால் எண்ணிலடங்கா டிசைன்கள் செய்து, பெண்களுக்கான உடைகளை தயாரித்து விற்பனை செய்துவருகிறார்.

கிராமத்தில் பிறந்து வளர்ந்து, இன்று ஜெர்மனியில் சொந்தத் தொழிலில் சாதித்து வருகிறார். சாதனை புரிவதற்கு, திருமணம் ஒரு தடையில்லை என்பதையும் நிரூபித்திருக்கும் மகேஸ்வரி, சுய தொழில் முனைய நினைக்கும் பெண்களுக்கு மிகப் பெரிய உந்து சக்தி என்பதில் சந்தேகமில்லை.

Exit mobile version