தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் பெண் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நடராஜபுரம் 9-வது தெருவை சேர்ந்தவர் பாண்டி. இவரது முதல் மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு மணிகண்டன் என்ற மகனும், கவிதா என்ற மகளும் உள்ளனர். இதில் கவிதாவுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். மகேஸ்வரி கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் பாண்டி முதல் மனைவியின் தங்கை கோகிலா என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மகேந்திரன் என்ற 15 வயது மகன் உள்ளான். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டி இறந்து விட்டார். இதனால் கோகிலா மகனுடன் தனியாக வசித்து வந்தார்.
பாண்டி அப்பகுதியில் உள்ள ரே ஷன் கடையில் வேலை பார்த்ததால் ஓய்வு பணமாக 2 லட்சம் ருபாய் வந்தது. இந்த பணத்தை பிரிப்பது தொடர்பாக முதல் மனைவியின் மகன் மணிகண்டனுக்கும், சித்தி கோகிலாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோகிலாவின் மகன் மகேந்திரன் பள்ளியின் மூலம் சுற்றுலா சென்றிருந்தான். நேற்று காலை சுற்றுலா முடிந்து மகேந்திரன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது தாய் கோகிலா கம்பியால் தாக்கப்பட்டு ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மகேந்திரன் கதறி துடித்தான்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மகேஸ்வரி, சத்யா, ஜஸ்டின் மற்றும் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர்.மேலும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில்; கோகிலாவை வீட்டில் இருந்த மரச்சேரை உடைத்து, அதில் இருந்த மரக்கட்டையினால் அடித்து கொலை செய்ததது மணிகண்டன் என்பது தெரியவந்தது. இதையெடுத்து காவல்துறையினர் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.