டெல்லியில் வாகன கட்டுப்பாடு அமலுக்கு வந்தது

டெல்லியில் காற்றுமாசைக் கட்டுப்படுத்த ஒற்றைப் படை எண்களில் முடியும் வாகனங்களை ஒரு நாளும், இரட்டைப் படை எண்களில் முடியும் வாகனங்களை மறுநாளும் இயக்கும் போக்குவரத்துக் கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேச மாநிலங்களில் அறுவடை முடிந்த பின் வைக்கோலை விவசாயிகள் தீயிட்டுக் கொளுத்தி வருகின்றனர். இந்தப் புகையுடன் தொழிற்சாலைப் புகை, வாகனப் புகை ஆகியனவும் சேர்ந்து டெல்லியில் புகைமூட்டம் சூழ்ந்து காற்று கடுமையாக மாசுபட்டுள்ளது. இதனால் மாணவர்களின் நலன் கருதிப் பள்ளிகளுக்கு நவம்பர் 5ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் சாலைகளில் ஓரளவு வாகன நெரிசல் குறைந்துள்ளது. எனினும் புகைமூட்டத்தால் பார்வைப் புலப்பாடு குறைந்துள்ளதால் வாகனங்கள் பகலிலும் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி செல்கின்றன. புகைமூட்டத்தின் காரணமாக டெல்லியில் இருந்து பல்வேறு நகரங்களுக்குச் செல்லும் விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டன. இதேபோல் டெல்லிக்கு வந்த விமானங்களும் தாமதமாகவே வந்து சேர்ந்தன. இதனால் விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகள் இன்னலடைந்தனர்.

Exit mobile version