டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில், ஆளும் ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.
70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 8ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் ஆம் ஆத்மி, பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவியது. டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 62 புள்ளி 59 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கையில் தொடக்க முதலே ஆளும் ஆத்மி கட்சி பல தொகுதிகளில் முன்னிலை பெற்று வந்தது.
இதுவரை முடிவுற்ற வாக்கு எண்ணிக்கையில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி 54 இடங்களையும், பாரதிய ஜனதா கட்சி 6 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.
2015ஆம் ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 67 இடங்களிலும், பாரதிய ஜனதா கட்சி 3 இடங்களிலும் வெற்றி பெற்றது.
தற்போது, இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி இதுவரை 54 இடங்களையும், பாரதிய ஜனதா கட்சி 6 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றதன் மூலம் டெல்லியில் இருந்து புதிய அரசியல் அத்தியாயம் தொடங்கியுள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று 3 ஆவது முறையாக ஆட்சி அமைக்கிறது. இந்நிலையில், இந்த வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், தன்னை தங்களது மகனாக பாவிக்கும் டெல்லி மக்களுக்கு கிடைத்த வெற்றி இது எனக் குறிப்பிட்டார்.
பகவான் ஹனுமான் தங்களை ஆசிர்வதித்துள்ளதாக கூறிய கெஜ்ரிவால், மக்களுக்காக உழைக்க கூடுதல் பலத்தை தங்களுக்கு வழங்குவார் என தெரிவித்தார்.