வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதால் மூன்று மாத கர்ப்பிணி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கணவர் உள்பட 6 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடலூர் கோட்டாட்சியர் விசாரணையும் நடைபெற்று வருகிறது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை அடுத்த ஓணாங்குப்பம் ஏரிக்கரை தெருவைச் சேர்ந்தவர் வினிதா. எம்.பி.ஏ பட்டதாரியான இவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். கடந்த 9 மாதங்களுக்கு முன்பு, வினிதாவுக்கும், குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் வசிக்கும் ராஜன் என்பவருக்கும், திருமணம் நடைபெற்றது. அப்போது, வினிதாவின் பெற்றோர் 20 சவரன் தங்க நகைகள், கட்டில்,பீரோ உள்ளிட்டவற்றை வரதட்சணையாக ராஜனுக்குக் கொடுத்தனர். அப்போது, ராஜனும் அவரது தந்தை சேட்டும் கார் ஒன்றும் வரதட்சணையாகக் கேட்டுள்ளனர். இதையடுத்து, வினிதாவின் தந்தை வேல்முருகன் காருக்குப் பதிலாக ஒன்றரை லட்சம் ரூபாயைப் பணமாக ராஜனுக்குக் கொடுத்துள்ளார்.
அதன்பிறகு, ராஜனும்-வினிதாவும் சென்னையில் வசித்து வந்தனர். அந்த சமயத்தில், தான் பார்த்து வந்த வேலையை விட்டுவிட்ட ராஜன், அடிக்கடி குடிக்கத் தொடங்கினார். மேலும், குடிபோதையில் வினிதாவை அடித்துத் துன்புறுத்தும் ராஜன், பைக் வாங்குவதற்கு அப்பாவிடம் பணம் வாங்கி வா என்றும் சொல்லி உள்ளார்.
இதுபற்றி வினிதா, அவரது தந்தை வேல்முருகனுக்குத் தகவல் தெரிவித்தபோது, அவர் அறுவடை முடிந்ததும் பைக் வாங்கப் பணம் தருகிறேன் என்று சொல்லி உள்ளார். ஆனால், அதில் சமாதானம் அடையாத ராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர், கார் வாங்குவதற்கும் உன் அப்பா முழுப் பணத்தைத் தரவில்லை… இப்போது பைக் வாங்குவதற்கும் பணம் தர மறுக்கிறார் என்று சொல்லி சொல்லி வினிதாவை அடித்துத் துன்புறுத்தி உள்ளனர். இந்நிலையில், நேற்று முன் தினம் இரவிலும், கணவன்-மனைவிக்கிடையில் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போதும் வினிதாவை அடித்த கணவர் ராஜன், மரியாதையாக உன் வீட்டில் போய் பணம் வாங்கிக்கொண்டு வா… இல்லையென்றால், அங்கேயே இருந்துவிடு… என்று சொல்லி அடித்துள்ளார். இதையடுத்து விரக்தியோடும், கடும் மனவேதனையோடும் தன் பெற்றோர் வீட்டுக்குத் திரும்பிய வினிதா, அங்கு தனது உடலில் மண்ணெண்னையை ஊற்றி தீவைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முன்னதாக, நீதிபதியிடம் வினிதா அளித்த மரண வாக்குமூலத்தில், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதால், தான் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார் .
இது குறித்த புகாரின் பேரில், வினிதாவின் கணவர் ராஜன், ராஜனின் தந்தை சேட்டு, தாய் கஸ்தூரி, சகோதரன் ராமச்சந்திரன், சகோதரிகள் ராஜேஸ்வரி மற்றும் அம்பிகா உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு குறிஞ்சிப்பாடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நெய்வேலி டிஎஸ்பி லோகநாதன் சம்பவம் நடந்த வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும், வினிதாவுக்கு திருமணமாகி 9 மாதங்களே ஆவதால் கடலூர் கோட்டாட்சியரின் மேல் விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.