கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மே 5ஆம் தேதி முதல் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மூச்சுத்திணறல் காரணமாக, இவருக்கு ஆக்சிஜன் கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மற்றொரு நோயாளிக்கு தேவைப்படுவதாகக் கூறி, ராஜாவுக்கு பொருத்தப்பட்ட ஆக்சிஜன் கருவியை, மருத்துவர்கள் பிடுங்கியதாக கூறப்படுகிறது. ஆக்சிஜன் கருவியை அகற்ற வேண்டாமென ராஜாவின் மனைவி கயல்விழி மருத்துவர்களிடம் கெஞ்சியுள்ளார். ஆனால், மருத்துவர்கள் அதனை அலட்சியப்படுத்தி, ஆக்சிஜன் கருவியை பிடுங்கியதால், அடுத்த சில நிமிடங்களிலேயே ராஜா துடிதுடித்து உயிரிழந்தார். கண்ணெதிரே கணவர் உயிரிழந்த வேதனை தாளமால், கயல்விழி கதறி அழுத காட்சிகள் காண்போர் நெஞ்சை உலுக்குகிறது.
மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியால் இழந்த தனது தம்பியின் உயிரை தர இயலுமா என அவரது சகோதரர் கண்ணீர் மல்க கேள்வி எழுப்பியுள்ளார். ஒரு நோயாளியை கொன்றுவிட்டு இன்னொரு நோயாளியை காப்பது நியாயமா என்றும் பணியில் இருந்த மருத்துவர்களை நோக்கி அவர் கேள்வி எழுப்பினார். இந்த கொடூர சம்பவத்திற்கு காரணமான மருத்துவ பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். ராஜாவின் இறப்புக்கு காரணமான மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சடலத்தை வாங்கவும் அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.