கணிணிகளில் உள்ள கோப்புகளை அபகரிக்கு கணிணி ஹேக்கர்கள்

கணிணி ஹேக்கர்கள் பெரம்பலூரில் போட்டோ ஸ்டுடியோ கணினிகளை பணத்திற்காக ஈமெயில் மூலம் குறிவைத்து தாக்கிவருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…..

தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன்பு விழுப்புரம் மற்றும் நாங்குநேரியில் உள்ள போட்டோ ஸ்டுடியோ உரிமையாளர்களுக்கு ஈமெயில் மூலம் வைரஸை அனுப்பி, பணத்திற்காக குறி வைத்து தாக்கிய ஹேக்கர்கள் தற்போது பெரம்பலூரிலும் தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர்.

பெரம்பலூர் நகர் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக ஸ்டூடியோ கடை நடத்தி வருபவர் ஸ்ரீதர். இவர் தனது கணிணியில் 20க்கும் மேற்பட்ட திருமணம் மற்றும் இதர நிகழ்ச்சிகளில் எடுத்திருந்த புகைப்படம் மற்றும் வீடியோ கோப்புகளை வைத்திருந்தார் .

இந்நிலையில், எப்போதும் போல தனது பணிகளை செய்து கொண்டிருந்த ஸ்ரீதருக்கு மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது .

அந்த மின்னஞ்சலைப் பிரித்து படித்த போது, அதுவரை நன்றாக செயல்பட்டுக் கொண்டிருந்த கணிணி திடீரென தானாக நின்றுவிட்டது.

மேலும், அவரது கணிணியில் இருந்த கோப்புகள் அனைத்தையும் திறக்க முடியவில்லை. பின்னர், மீண்டும் ஸ்ரீதருக்கு மீண்டும் ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது, அதில், 980 டாலர் பணம் செலுத்தினால் மட்டுமே மீண்டும் உங்கள் கோப்புகளை பெற முடியும் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.

அதோடு, 72 மணி நேரத்திற்குள் பணத்தை செலுத்தினால் 50 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என்றும் அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்ரீதர், இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாகவும், காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுவரை பல்வேறு தரப்பினர் கணினி ஹேக்கர்களால் பாதிக்கப்பட்டு வந்துள்ள நிலையில் தற்போது போட்டோ ஸ்டூடியோ உரிமையாளர்களும் பாதிக்கப்படுவதாகவும், இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Exit mobile version