சீனாவில் உள்ள இந்தியர்களை மீட்க போயிங் 747 ரக விமானம்

சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், அங்குள்ள இந்தியர்களை மீட்க ஏர் இந்தியாவின் போயிங் 747 ரக விமானம் சீனாவுக்கு சென்றுள்ளது.

சீனாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கம், உலகையே பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளது. சீனாவின் உகான் நகரில் இருந்து பரவிய இந்த வைரஸ், இந்தியா, இந்தோனேசியா, அமெரிக்கா, ஃபிரான்ஸ் உள்பட 18 நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் இந்த நோய்க்கு 200க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். கல்வி மற்றும் வேலை நிமித்தமாக சீனா சென்ற 600 இந்தியர்கள் உகான் நகரில் சிக்கித் தவித்தனர். தங்களை மீட்கவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.  உகான் நகரில் இருந்து யாரையும் வெளியேற்ற முடியாது என்று சீன அரசு திட்டவட்டமாக தெரிவித்தது. இதையடுத்து, இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, சீனா அனுமதி வழங்கி உள்ளது. இந்தநிலையில், இந்தியர்களை மீட்பதற்காக ஏர் இந்தியாவின் போயிங் 747 ரக விமானம், டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று சீனா புறப்பட்டுச் சென்றது. அந்த விமானத்தில், 5 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய மருத்துவக் குழுவும் சென்றுள்ளனர்.  உகான் நகரில் இருந்து முதல் கட்டமாக 325 இந்தியர்கள் இந்த விமானத்தில் அழைத்து வரப்படுகிறார்கள். விமானத்தில் அழைத்து வரப்படுவதற்கு முன்னதாக, அவர்களுக்கு தீவிர மருத்துவ பரிசோதனை செய்யப்படும். இதனையடுத்து, இந்த விமானம் நாளை இந்தியா வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு, கையுறை, உடலை மறைக்கும் பிரத்யேக உடை ஆகியவை அணிவிக்கப்பட்டு, மிகுந்த பாதுகாப்புடன் அழைத்து வரப்படுவார்கள் என்றும், இந்தியா வந்ததும், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, 14 நாட்கள் டெல்லி மனேசர் பகுதியில் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, எஞ்சியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக மேலும் ஒரு சிறப்பு விமானத்தை, இந்தியா நாளை சீனாவுக்கு அனுப்பவுள்ளதாக ஏர் இந்தியா விமான நிறுவன செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version