சென்னையில் கொரோனா தொற்று சுனாமி போல் பரவி வருவதாகவும், பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே இந்தப் பெரிய அலையை ஒழிக்க முடியும் என்றும் சென்னை கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி சித்திக் தெரிவித்துள்ளார்.
சென்னை சிஐடி நகரில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்களிடம் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி சித்திக் ஆகியோர் உரையாடினர்.
அந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து அவர்கள் கேட்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சித்திக், கடந்த ஆண்டு சென்னையில் சிறு அலையாக இருந்த கொரோனா, தற்போது சுனாமி பேரலையாக உருவெடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.
அரசின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால் நோய் தொற்றை முழுமையாக ஒழிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
சென்னை மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கை வசதிகளை அதிகரிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், அடுத்த 10 நாட்களில் புதிதாக 2,400 படுக்கைகளில் ஆக்சிஜன் வசதிகள் ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் ஆக்சிஜன் வசதியுடன் படுக்கைகள் அமைக்கும் பணி நடைபெறுவதாகவும், முதற்கட்டமாக 250 படுக்கை வசதி ஏற்படுத்த உள்ளதாகவும் சிறப்பு அதிகாரி சித்திக் கூறினார்.