பிகில் படத்திற்குத் தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

விஜய் நடிப்பில் தீபாவளி பண்டிகையின் போது வெளியாகவிருந்த பிகில் படத்திற்குத் தடை கோரிய வழக்கில், இயக்குநர் அட்லீ மற்றும் படத் தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் ஆகியோர் வழக்கு தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஜய், நயன்தாரா நடிப்பில், ஏ.ஆர் ரஹ்மான் இசையில், பெண்கள் கால் பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள பிகில் படத்தை அட்லீ இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் கதை தனக்குச் சொந்தமானது எனவும், அதைத் தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளதாகவும் உதவி இயக்குநரான செல்வா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், பிகில் படத்தைத் திரையிடுவதற்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார் வழக்குத் தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்யுமாறு அட்லீ மற்றும் ஏஜிஎஸ் நிறுவனம் ஆகியோருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தார்.

Exit mobile version