ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட பழமையான நடராஜர் சிலை சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் உள்ள 700 ஆண்டுகள் பழமையான குலசேகர பாண்டியனால், கட்டப்பட்ட குலசேகர முடையார் கோவிலில் இருந்த நடராஜர் சிலை கடந்த 1982ம் ஆண்டு கொள்ளைபோனது. மேலும் சிவகாமி அம்மன் சிலை, விநாயகர் மற்றும் மாணிக்கவாசர் சிலைகளும் திருடப்பட்டன. இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது. இந்தநிலையில், நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்ட் நகரில் அருங்காட்சியகத்தில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, நடராஜர் சிலை அருங்காட்சியத்தில் இருந்து மீட்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவில் இருந்து டெல்லி கொண்டு வரப்பட்ட சிலை, தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சிலை சென்னை எம்.ஜி.ஆர். மத்திய ரயில் நிலையம் வந்தடைந்தது. ஏராளமான பக்தர்கள் சிவ பூதகண வாத்தியங்கள் முழங்க நடராஜர் சிலைக்கு வரவேற்பளித்தனர். பின்னர் ரயில் நிலையத்திலேயே நடராஜருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இந்த சிலையானது கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி கல்லிடைக்குறிச்சி கோயிலில் வைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். மீட்கப்பட்ட நடராஜர் சிலையின் சர்வதேச மதிப்பு 30 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.