இன்னும் 3 நாட்களில் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருக்கும் அனைவரும் கைது செய்யப்படுவார்கள்: மைத்ரிபால சிறிசேன

இன்னும் மூன்று நாட்களில் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருக்கும் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கடந்த 21ம் தேதி ஈஸ்டர் தினத்தின் போது ஐ.எஸ். தீவிரவாதிகள் மேற்கொண்ட தற்கொலைப்படை தாக்குதல்களையடுத்து அங்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இலங்கையிலிருந்து தீவிரவாதத்தை முற்றிலும் துடைத்தெறியும் பணியில் அதிபர் சிறிசேன ஈடுபட்டுள்ளார்.

தற்கொலைப்படை தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய சிறிசேன, தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட 56 பேர்களில் 12 பேர் மிக முக்கிய தீவிரவாதிகள் என தெரிவித்துள்ளார்.அவர்களிடம் இருந்து டெட்டனேட்டர்கள், ஜெலட்டின் குச்சிகள், குண்டுகள் தயாரிக்கும் மூலப்பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தீவிரவாதிகளின் பேரில் இருந்த 41 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், அவர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டு அரசு உடைமையாக்கப்படும் என்றும் கூறினார்.

இந்நிலையில் இலங்கையில் தேசிய பாதுகாப்பை முன்னிறுத்தி பள்ளிக்கூட மாணவர்களை கூட ஆயுதமுனையில் சோதனையிடும் பாதுகாப்புப் படையினரின் செயல்பாட்டிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், முஸ்லிம் இனவாத மற்றும் தீவிரவாத செயல்பாட்டிற்கு உரமிட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Exit mobile version