ஜம்மு-காஷ்மீர் எல்லையில் கடந்த ஆண்டு மொத்தம் 3 ஆயிரத்து 479 முறை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில், ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சர்வதேச எல்லையையொட்டிய பகுதிகளில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் கடந்த ஆண்டு 3 ஆயிரத்து 479 முறை தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், இதில் இந்திய ராணுவ வீரர்கள் 13 பேரும், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல்களுக்கு இந்திய ராணுவமும், எல்லைப் பாதுகாப்புப் படையும் தக்க பதிலடியை அளித்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், அத்துமீறல் சம்பவங்கள் தொடர்பாக, பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுடனான வழக்கமான பேச்சுவார்த்தையின்போது இந்தியா சுட்டிக்காட்டி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.