காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான் படுதோல்வி அடைந்துள்ளதாக அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் பேசும் காணொலி பாகிஸ்தானில் வைரலாகி வைரலாகி வருகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்த போது அதற்கு எதிராக பாகிஸ்தான் கடும் கண்டனங்களைத் தெரிவித்தது. இந்தியாவுடனான வர்த்தக உறவு, ரயில் போக்குவரத்து உள்ளிட்டவற்றையும் பாகிஸ்தான் துண்டித்துக் கொண்டது.
இந்தியாவுக்கு எதிராக உலக நாடுகளைத் திரட்ட பாகிஸ்தான் அரசு பல வழிகளிலும் முயன்றது, ஆனால் அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இந்நிலையில், பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கானை விமர்சித்து, பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பேனசீர் பூட்டோவின் மகனும், பாகிஸ்தானின் எதிர்க்கட்சித் தலைவருமான பிலாவல் பூட்டோ பேசியுள்ள காணொலி தற்போது பாகிஸ்தானில் வைரலாகி வருகின்றது. அதில்,
‘‘காஷ்மீர் விவகாரத்தில் இம்ரான் கான் முழுமையாக தோல்வியடைந்து விட்டார். இந்தியப் பிரதமர் மோடி காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்து விட்டார். இந்த விவகாரத்தில் ட்ரம்ப்பும் கைவிரித்து விட்டார். ஜி7 நாடுகளும் இதைப் பேசவில்லை. எந்த நாடும் இந்தியாவை கண்டிக்கவில்லை. காஷ்மீரும், அதன் தலைநகர் ஸ்ரீநகரும் நம்மிடம் இருந்து பறி போய் விட்டன. நம்மிடம் மீதம் இருக்கும் ஆக்கிரமிப்பு காஷ்மீரையும் அதன் தலைநகரான முசாபராபாத்தையுமாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
இதற்காவது இம்ரான் கான் நடவடிக்கை எடுக்க வேண்டும். வேறெதுவும் செய்யாமல், பாகிஸ்தானின் பொருளாதாரத்தை கொள்ளையடிப்பதை மட்டுமே இம்ரான்கான் செய்து வருகிறார்’’ என பிலாவல் பூட்டோ கூறியுள்ளார்.
பிலாவலின் இந்தக் கருத்தை பாகிஸ்தானியர்கள் பலரும் ஆமோதித்து பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். இது பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கானுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்திவருகின்றது.