சமூக நீதியில் முன்னேற்றம் – ஆளுநர் பாராட்டு

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7 புள்ளி 5 சதவீதம் உள் ஒதுக்கீடு செய்யப்பட்டதன் மூலம், தமிழகத்தில் சமூக நீதி மற்றும் சம நீதியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர் பன்வாரிலால், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று, நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்களுக்கு, எம்பிபிஎஸ், பல் மருத்துவப்படிப்பு, இந்திய மருத்துவம், ஹோமியோபதி படிப்புகளில், 7 புள்ளி 5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

தொலைதூர கிராமப்புறங்களிலும், நகர்ப்புற குடிசைப் பகுதிகளிலும், இலவச ஆரம்ப சுகாதார வசதிகளை அளிப்பதற்காக, 2 ஆயிரம், முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகள் அமைக்கும் திட்டத்தை ஆளுநர் பாராட்டினார்.

அனைத்து குறைத்தீர்க்கும் அமைப்புகளையும் ஒருங்கிணைத்து, முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைத்தீர்ப்பு மேலாண்மை திட்டம் செயல்படும் எனக் குறிப்பிட்டார். குடிமக்கள் தங்களது வீட்டில் இருந்தே முதலமைச்சரின் உதவி மையத்தினை, ஆயிரத்து 100 என்ற எண்ணிற்கு அழைப்பதன் மூலம், அரசின் சேவைகளை விரைவில் பெற இயலும் என ஆளுநர் குறிப்பிட்டார்.

தமிழ்மொழி பேசப்படும் பகுதிகளை தமிழகத்துடன் இணைப்பதற்காக போராடியவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை, 4 ஆயிரத்து 500-ல் இருந்து, 5 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீழடி அகழ்வாராய்ச்சியில், சங்க கால பண்பாட்டின் செழுமையான தொல்பொருட்கள் கிடைத்துள்ளதாகவும், இவை உலகத் தரம் வாய்ந்த அகழ்வைப்பகத்தில் காட்சிப்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மறைந்த முதலமைச்சர் புரட்சித் தலைவி ஜெயலலிதாவுக்கு பெருமை சேர்க்கும் விதமாக, நினைவிடம், நினைவு இல்லம், 9 அடி உயர வெண்கல சிலை திறக்கப்பட்டதுடன், தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் வளாகத்திற்கு டாக்டர் ஜெ ஜெயலலிதா வளாகம் என பெயர் சூட்டப்பட்டுள்ளதையும் குறிப்பிட்ட ஆளுநர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் எனவும் தெரிவித்தார்.

 

Exit mobile version