’நீட்’ தேர்வு, ஜி.எஸ்.டி. நிலுவை… அ.தி.மு.க. செயற்குழுவின் முக்கிய தீர்மானங்கள்

சென்னை இராயப்பேட்டை தலைமைக்கழக அலுவலகத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கியத் தீர்மானங்கள்:

நீட் தேர்வைக் கைவிடவேண்டும் :

’நீட்’ என்ற மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான அகில இந்திய பொதுநுழைவு மற்றும் தகுதித் தேர்வை ஆரம்பத்திலிருந்து அ.தி.மு.க. தொடர்ந்து எதிர்க்கிறது. மாநிலங்களின் கல்வி உரிமையில் ’நீட்’ தேர்வு மூலம் மத்திய அரசு தலையிடுவதாலும், கிராமப்புற, ஏழை, எளிய, முதல் தலைமுறை மாணவர்கள் மருத்துவக் கல்வி பெறுவதைத் தடுக்கும்வகையில் இருப்பதாலும், கல்வி வணிகமயமாக்கப்படுவதை ஊக்குவிக்கும்வகையில் உள்ளதாலும், ‘நீட்’ தேர்வு முறையை மத்திய அரசு கைவிடவேண்டும்.

’நீட்’ தேர்வு முறை செயல்படுத்தப்படக் காரணமாக இருந்த மத்திய கூட்டணி அரசில் பங்குபெற்றிருந்த தி.மு.க., இப்பொழுது உண்மையை மறைத்துவிட்டு ‘நீட்’ தேர்வுகளைக்காட்டி அரசியல் லாபங்களுக்காக கபட நாடகம் ஆடுவதை இந்த செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

 

மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு கண்டனம்: 

காவிரி ஆற்றின் குறுக்கே புதிதாக மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசி முயற்சிகளுக்குக் கண்டனம்.

மேகதாது அணைத் திட்டத்தைத் தடுத்துநிறுத்த உரிய நேரத்தில் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கும் தமிழ்நாடு அரசுக்குப் பாராட்டு.

 

மொழித்திணிப்பை ஏற்கமாட்டோம் :

தாய்மொழி – தமிழ், உலகத்தோடு உறவாட ஆங்கிலம் எனும் இணைப்பு மொழி என்கிற இருமொழிக் கொள்கையே என்றென்றைக்கும் அ.தி.மு.க.வின் மொழிக்கொள்கை. எந்த மொழிக்கும் அ.தி.மு.க. எதிரானதல்ல; எந்த மொழியும் எம்மீது திணிக்கப்படுவதை எம்மால் ஏற்க இயலாது என்ற கருத்தில் அ.தி.மு.க. உறுதியாக இருக்கும்.

 

கொரோனா நிதி, ஜி.எஸ்.டி. நிலுவை தரவேண்டும் :

அ.தி.மு.க. அரசின் சிறப்பானப் பணிகளின் விளைவாக கொரோனா நோய்த்தொற்றில் இருந்தும், பொருளாதார சரிவில் இருந்தும் மக்கள் பாதுகாக்கப்பட்டிருகின்றனர். இதை ஏற்று, மத்திய அரசு கொரோனா நிவாரணத்துக்கும், தடுப்புக்கும் போதுமான நிதி ஆதாரத்தை தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு தரவேண்டியுள்ள ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகை மற்றும் பல்வேறு திட்டங்களுக்கான மானிய நிலுவைத்தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்கவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

 

பண்பாட்டுக்குழுவில் தமிழகத்துக்கு இடமளிக்க வேண்டும்: 

இந்திய கலாச்சாரம் மற்றும் பண்பாடு ஆகியவற்றின் தோற்றம், வளர்ச்சி பற்றி மறு ஆய்வுசெய்ய அமைக்கப்பட்டிருக்கும் குழுவில், தென்மாநிலங்களைச் சேர்ந்த, குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த அறிஞர்களுக்கு மத்திய அரசு இடமளிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. வலியுறுத்துகிறது.

கச்சத்தீவு மீட்கப்படவேண்டும்; இலங்கை தமிழர் நலன் காக்கப்படவேண்டும் என்பதில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தப்படவேண்டும்.

Exit mobile version