மக்களவை தேர்தலுக்கான இறுதிக்கட்ட தேர்தலில் அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட முக்கிய பிரமுகர்கள் ஆர்வமுடன் தங்களின் வாக்கை செலுத்தி வருகின்றனர்.
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் கோரப்பூர் தொகுதிக்குட்பட்ட 246வது வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், உத்தர பிரதேசத்தில் இருந்து அதிக எம்.பி.க்கள் பாஜக சார்பில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படுவர் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் பாட்னா ராஜ்பவனில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார். பீகார் துணை முதல்வர் சுஷில் மோடி பாட்னாவில் உள்ள 49வது வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார்.
மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், பாட்னாவில் உள்ள பெண்கள் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு சாவடியில் தனது வாக்கை செலுத்தினார். பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில், பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது வாக்கினை பதிவு செய்தார்.
மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மத்திய பிரதேசத்தின் இந்தூரில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி எண் 212ல் தனது வாக்கினை செலுத்தினார்