டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதுகுறித்து சட்ட வல்லுநர்களுடன் விரிவாக ஆலோசிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார்.
ஹஜ் கமிட்டி கட்டடம் கட்ட 15 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்று பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல், இஸ்லாமியர்களுக்கு தமிழக அரசு பாதுகாவலனாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
திமுக சட்டமன்ற உறுப்பினர் பெரியசாமி எழுப்பிய கேள்விக்கு, பதிலளித்த உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு குடிநீர் வசதிகள் செய்து கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில், ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், 7 பேர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்றார்.