மனிதன் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுதும், விழித்துக் கொண்டிருக்கும் மூன்றாவது கண், சிசிடிவி கேமராக்கள் தான். குற்றவாளிகளை அடையாளம் காட்டவும், நிரபராதிகளை பாதுகாக்கவும், சட்டத்தின் முன் நீதியை நிலைநாட்டவும், ஆதாரமாய் விளங்கும் சிசிடிவி கேமராக்கள் குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
மிகப்பெரிய வர்த்தக நகரமாக விளங்கும் சென்னை மாநகரம், பல மாவட்ட, மாநிலங்கள் மட்டுமில்லாமல், பல நாட்டு மக்களையும் ஒன்றாக காணக்கூடிய இடமாக திகழ்கிறது. எப்போதுமே பரபரப்புடன் காணப்படும் சென்னையில், அங்காங்கே கொலை, கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. குற்றச்சம்பவங்களை தடுக்கவும், சட்டம் ஒழுங்கை நிலை நாட்டவும், சென்னை மாநகர காவல் துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக, மாநகர் முழுவதும் உள்ள சாலைகளில், ஒவ்வொரு 50 மீட்டர் இடைவெளியிலும், சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
பல வழக்குகளில் முக்கிய சாட்சியாக விளங்குகிறது இந்த மூன்றாவது கண். சென்னை கோயம்பேட்டில் இருந்து பாரிமுனை செல்லக்கூடிய மாநகரப் பேருந்து மோதி வடமாநில இளைஞர் உயிரிழந்தார் என்று, பேருந்து ஓட்டுநர் ஈஸ்வரன் மீது வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையின்போது, அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை சோதனை செய்தனர். அதில், வடமாநில இளைஞர் ஒருவரை, இரண்டு பேர் அடித்து, பணத்தை பறித்துக் கொண்டு பேருந்து மீது தள்ளிவிட்டதும், இதில் உயிரிழந்த இளைஞர் பீகாரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, ஓட்டுநர் ஈஸ்வரனுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பில்லை என்று கண்டறியப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் மாரிமுத்து, தேவன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதேபோல், சென்னை மெட்ரோ ரயிலில் எலக்ட்ரீசியனாக பணியாற்றிவந்த அப்துல் மாலிக் என்பவர், சிந்தாதிரிப்பேட்டை அருகே சென்றுகொண்டிருந்தபோது, அவரது செல்போனை மர்மநபர்கள் பறித்து சென்றனர். சிசிடிவி கேமராக்களை வைத்து, சம்பவத்தில் தொடர்புடைய முகமது இஸ்மாயில் மற்றும் சந்தோஷ்குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை, சிசிடிவி கேமராக்கள் உதவியோடு கைது செய்ததாகவும், பல்வேறு சம்பவங்களில் பலரது வாழ்க்கையை மாற்றிய சாட்சியமாக சிசிடிவி கேமரா உள்ளது என்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறினார். சிசிடிவி கேமராக்களால் சென்னையில் குற்றங்கள் குறைந்துள்ளன. இதற்கு ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு காவல் துறை சார்பில் நன்றி எனவும் அவர் கூறினார்.