குஜராத் மாநிலம் சூரத்தில் அதிகமான வெயில் வாட்டி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் வழக்கத்திற்கு மாறாக கடுமையான வெயில் நிலவி வருகிறது. அங்கு கடந்த சில தினங்களாக வெப்பநிலை 40 டிகிரி செல்சியசுக்கும் மேல் பதிவாகி வருகிறது. இந்நிலையில், மாநிலத்தில் நிலவும் கடுமையான வெப்பத்தால், அங்குள்ள மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கடும் வெப்பத்தால் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. பகல்நேர பயணங்களை வாகனஓட்டிகள் தவிர்த்து வருகின்றனர். அவ்வாறு செல்லும் நிலை ஏற்பட்டாலும் தலையில் துண்டுகள் கட்டியபடி பயணம் மேற்கொள்கின்றனர். கடுமையான வெப்பத்தால் பக்கத்தில் உள்ள வாகனங்கள்கூட கண்ணுக்குத் தெரியாத நிலை காணப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
வெயிலின் காரணமாக, கண்களுக்கு குளிர்ச்சியளிக்கக்கூடிய சன்கிளாஸ்களை அணிந்து செல்வதையும் அவர்கள் நடைமுறைப்படுத்தியுள்ளனர். குளிர்பான கடைகளில் அதிகமானோர் கூடி தாகத்தை தணித்து வருகின்றனர். இதனால் குளிர்பானங்களின் விற்பனை அதிகரித்துள்ளது.