`எனக்கு பயமாக இருக்கிறது; எங்களுக்கு மட்டும் ஏன் இப்படி?’ – கதறும் பாலஸ்தீன சிறுமி!

நினைத்துப்பாருங்கள்.. நீங்கள் வெறும் 10 வயதாக இருக்கும்போது உங்களைச் சுற்றியிருக்கும் பெரும்பாலானோர் இறந்துகிடக்கிறார்கள். இறப்புகள் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. காணும் கட்சிகளெல்லாம் ரத்தம் தோய்ந்த இடங்களாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் மரணத்தின் ஓலங்கள் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது. இப்படித்தான் இருக்கிறது பாலஸ்தீனத்தில் வாழும் குழந்தைகளின் அன்றாட வாழ்க்கை.

நில ஆக்கிரமிப்புக்காக பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை அரங்கேற்றி வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை 149 பாலஸ்தீனியர்களை கொன்று குவித்திருக்கிறது இஸ்ரேல். அதில் 41 பேர் குழந்தைகள். 1,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதனிடையே காஸா பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

வீடியோவைப் பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்

 

அந்த வீடியோவில் பேசும் சிறுமியின் பெயர் அப்தெல்-தைஃப். இந்த கொடுமையான சூழலில் தான் யாருடைய உதவியும் இல்லாமல் உணர்வதாக கூறி கண்களில் கண்ணீர் சிந்தும் வீடியோ பலரையும் உருக வைத்துள்ளது. “நான் எப்போதும் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறேன் … என்னால் எதுவும் செய்ய முடியாது … எனக்கு 10 வயதுதான்” என்கிறார் சிறுமி.

“என்னால் என்ன செய்ய முடியும்? எப்படி இதை சரிசெய்ய முடியும்? எனக்கு வெறும் 10 வயது தான் ஆகிறது. இனியும் இதை என்னால் சமாளிக்க முடியாது” என்று அவரைச் சுற்றியிருக்கும் கட்டிட இடிபாடுகளை சுட்டிக்காட்டியபடியே தனது வேதனையை வெளிப்படுத்துகிறார். “நான் ஒரு டாக்டராகவோ அல்லது வேறு ஏதோ ஒன்றாக மாறி என் மக்களுக்கு உதவ வேண்டும். ஆனால் என்னால் முடியாது. காரணம் நான் ஒரு சிறுமி. எனக்கு பயமாக இருக்கிறது. என் மக்களுக்கு நான் எதையும் செய்ய தயாராக இருக்கிறேன். ஆனால் என்ன செய்ய முடியும் என்று எனக்கு தெரியவில்லை. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படி? நாங்கள் அப்படி என்னதான் செய்தோம்?” என்று கண்ணீருடன் தொடர் கேள்விகளை எழுப்புகிறார். மற்றொருபுறம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தாக்குதல் தொடரும் என அறிவித்திருக்கிறார்.

 

Exit mobile version