இளையராஜா-பிரசாத் ஸ்டுடியோ இடையிலான பிரச்னையை 2 வாரத்திற்குள் முடிக்கவேண்டும் என உரிமையியல் நீதிமன்றத்திற்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவை, இசையமைப்பாளர் இளையராஜா 40 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வந்தார். அங்கிருந்து இளையராஜாவை வெளியேறும்படி ஸ்டுடியோ நிர்வாகம் தெரிவித்திருந்தது. இட உரிமை தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையேயான வழக்கு ஏற்கனவே 17-வது மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் என இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை சமரச தீர்வு மையத்திற்கு உயர்நீதிமன்றம் அனுப்பிய நிலையில், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பிரசாத் ஸ்டூடியோவில் மேலும் சில நாட்கள் தனது பணியை இளையராஜா தொடர்வதில் பிரச்சினை இருக்காது என நம்புவதாக நீதிபதி தெரிவித்தார். மேலும், உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை இரண்டு வாரத்துக்குள் முடித்து உத்தரவு பிறப்பிக்குமாறு தீர்ப்பளித்தார்.