எக்கோ ரெக்கார்டிங் நிறுவனம் மீது இசையமைப்பாளர் இளையராஜா அளித்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அந்த நிறுவனத்துக்கு எதிராக தொடர்ந்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எக்கோ நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கில், கடந்த 2010ஆம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவு போலீசில் இளையராஜா தங்களது நிறுவனத்திற்கு எதிராக புகார் ஒன்றை அளித்ததாகவும் அந்த புகாரில் தன்னுடைய பாடல்களை காப்புரிமை இல்லாமல் எங்கள் நிறுவனம் பயன்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இளையராஜாவின் புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், தங்களது நிறுவனத்திலிருந்த 20,000 சி.டி க்களை பறிமுதல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், அவர் பணம் வாங்கிக் கொண்டு தான் இசையமைத்து வருகிறார் என்பதால், அவர் இசையமைத்த பாடல்களுக்கு உரிமை கோர முடியாது என்றும், இளையராஜாவின் குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை என்பதோடு, இந்த பிரச்சனை ஒரு சிவில் பிரச்சனை என்பதால், இந்த சர்ச்சை தொடர்பாக அவர் கிரிமினல் புகார் கொடுக்க எந்த அதிகாரமும் இல்லை என்றும் அதை ரத்து செய்ய வேண்டும் எனவும் அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.முரளீதரன், இந்த பிரச்சினை ஒரு சிவில் பிரச்சினை என்பதனால் கிரிமினல் புகார் அளிக்க முடியாது என்று கூறி இளையராஜா அளித்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் எக்கோ நிறுவனத்தின் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.