மும்பையில் IIFA திரைப்பட விருதுகள் வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது.
பன்னாட்டு இந்தியத் திரைப்பட அகாடமி சார்பில் சிறந்த திரைப்படங்கள், நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா மும்பையில் நடைபெற்றது. சிறந்த நடிகருக்கான விருது ‘பத்மாவத்’ திரைப்படத்தில் நடித்த ரன்வீர் சிங்குக்கு வழங்கப்பட்டது. சிறந்த நடிகைக்கான விருது ‘ராசி’ படத்தில் நடித்த ஆலியா பட்டுக்கு வழங்கப்பட்டது. ‘அந்ததுன்’ திரைப்படத்தை இயக்கிய ஸ்ரீராம் ராகவனுக்குச் சிறந்த இயக்குநருக்கான விருது வழங்கப்பட்டது.
சிறந்த புதுமுக நடிகருக்கான விருது ‘தாடக்’ படத்தில் நடித்த இசான் கட்டாருக்கும், புதுமுக நடிகைக்கான விருது ‘கேதார்நாத்’ படத்தில் நடித்த சாரா அலிகானுக்கும் வழங்கப்பட்டன. ஆலியா பட், விக்கி கவுசல் நடித்த ‘ராசி’ சிறந்த திரைப்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. விருது வழங்கும் விழா மிகவும் வண்ணமயமாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது.