முதுகலை தொல்லியல் பட்டயப் படிப்பில் சேர்வதற்கான கல்வித் தகுதியில் தமிழையும் சேர்க்க வேண்டும் என்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், பண்டிட் தீனதயாள் தொல்லியல் பல்கலைக்கழகத்தின் இரண்டு ஆண்டு முதுகலை பட்டயப் படிப்புக்கான கல்வித் தகுதியில் தமிழ்மொழி இடம்பெற வேண்டும் கூறியுள்ளார். தொல்லியல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் குறைந்தபட்ச கல்வித் தகுதியாக செம்மொழி அந்தஸ்து பெற்ற சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம், அரபி அல்லது பெர்ஷியன் போன்றவை இடம்பெற்றிருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 2005ம் ஆண்டு செம்மொழி அந்தஸ்து பெற்ற சமஸ்கிருதம் அறிவிப்பாணையில் இடம்பெற்றுள்ளபோது, 2004ம் ஆண்டே செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்ட தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது வேதனை அளிப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். தொல்லியல் ஆய்வில் பல மொழிகளில் இடம்பெற்றுள்ள 48,000 பழங்கால கல்வெட்டுகளில் 28,000-ற்கும் மேற்பட்டவைகள் தமிழில் உள்ளது என்பதை முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு முதுகலை தொல்லியல் பட்டயப் படிப்பு கல்வித் தகுதியில் தமிழையும் சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.